இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய "லோதா கமிட்டி" பரிந்துரைத்தது. அதன்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது. ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தால், அடுத்து ஒரு இடைவெளி விட்டு தான் பதவிக்கு வர முடியும். கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு பதவி வகிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த புதிய விதிகளின் படி மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல், அடுத்த மாதம் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தலை நடத்தி விட்டன.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடத்தியது. அதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக மாநில கிரிக்கெட் சங்கங்களில் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்பது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.