
தஞ்சாவூர் ஜில்லாவில் இருந்து பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைகள் மட்டுமல்ல கோயில்களும் பெருமை பேசும். அத்தனையும் பிரமாண்டத்தின் உச்சமாக உள்ளது. இதில் ஒன்று தான் ஆலங்குடி தாலுகாவில் கீரமங்கலம் அருகே வீரத்தின் அடையாளமான வன்னிமரங்கள் அடர்ந்திருந்த வில்லுனி ஆற்றங்கரையில், மா, பலா, வாழை என முக்கனிகளும், மல்லிகை, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களோடு நெல், சோளம், மிளகாய், கடலை, பயறு என நவதானியங்கள், தென்னையும் பனையும் குழைகுழையாய் காய்க்கும் பொன் விளையும் பூமியாம், குளமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில்.
மிளகாய் தோட்டங்களுக்கு நிறைந்திருந்த கிராமத்தில், அடர்ந்து படர்ந்த காரைப்புதர் செடிகளுக்குள்ளிருந்து எழுந்தருளியதால் ‘பெருங்காரையடி மீண்ட அய்யனார்’ என்பதையே மக்கள் இன்றும் அழைத்து வருகின்றனர். இப்படியான வீரம் விளைந்த மண்ணில் வீரத்தின் அடையாளமான அய்யனாருக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டும் போது நுழை வாயிலின் வடக்குப் பக்கம் அய்யனாரின் வாகனமான 33 அடி உயரத்தில் வானில் தாவிச் செல்லும் வடிவில் தங்க கொலுசு போட்ட பிரமாண்ட வெள்ளைக் குதிரை சிலையும் எதிரே தெற்கு பக்கத்தில் அதே உயரத்தில் யானை சிலையும் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு காட்டாற்று வெள்ளம் பனைமரம் உயரத்தில் கரைபுரண்டு ஓடியதில் பிரமாண்ட யானை சிலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஆனால், இந்த பிரமாண்ட குதிரை சிலை மட்டும் எந்த ஒரு பாதிப்புமின்றி கம்பீரமாய் உயர்ந்து நின்றது. மேலும், "ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை" என்ற பெயர் பெற்றதால் இதனை குளமங்கலம் பெரிய கோயில் என்றே இன்றளவும் பக்தர்கள் அழைத்து வருகின்றனர். தலவிருச்சமாக பெரிய காரைச் செடி உள்ளது. காரையடி அய்யனார் என்ற காரைச் செடிகளுடன் அய்யனார் சிற்பமும் உள்ளது.
ஆண்டவன் பெயர்;
தண்ணீர் நிரம்பி வழியும் ஏராளமான ஏரி, குளங்கள் இருந்ததால் குளமங்கலம் என்றும், கிராமத்தின் குலப்பெருமை காத்து நிற்கும் ஊர் என்பதால் குலமங்கலம் என்று அழைப்பதுண்டு. அதே போல இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி அய்யனாரின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு முண்டன், முண்டையன், காரைடிச் செல்வன், பெருங்காரையடிச்செல்வன் என்றும், பெண்குழந்தைகளுக்கு பெருங்காரையடிச்செல்வி என்றும் அய்யனாரின் துணையாக இருக்கும் புஸ்பம், புஷ்பகலா, பூரணம் என்ற பெயர்களையும் இன்றளவும் தங்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கின்றனர். அதே போல பரிவார தெய்வமாக உள்ள பொம்மியம்மன் பெயரைக் குறிப்பிடும் விதமாக தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு பொம்மி என்ற செல்லப் பெயர் வைத்து அழைத்தும் வருகின்றனர்.
குவியும் மாலைகள்;

இந்த கோயிலுக்கென்று உள்ளூரில் மட்டுமின்றி "தானாண்மை நாடு" என்று சொல்லக்கூடிய குளமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்களும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பக்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் திருவிழா 2 நாட்கள் நடக்கும். முதல் நாளில் பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் (33 அடி) கிராமத்தின் சார்பில் ஊர் மாலை என்ற பெயரில் முதல் மாலை அணிவித்த பிறகு, பக்தர்கள் காகிதப்பூ மாலைகளை லாரி, வேன், கார்களில் ஏற்றிவந்து குதிரை சிலையின் உருவமே மறையும் அளவிற்கு அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பலர் பூக்களால் செய்யப்பட்ட மலர் மாலைகளையும், பழங்களால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாலை அணிவிக்கும் நேரத்தையும் அதிகரிக்கும் விதமாக ஒரு நாள் முன்னதாக ஊர் மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.
பல கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரம் மாலைகள் வந்து குவியும். இந்த நாட்களில் குதிரை சிலை மறையும் அளவில் மலைபோல் மாலைகள் அழகைக் காணவும், பால்குடம், காவடி, கரும்புத் தொட்டில் காணவும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துவிட்டாலும் அத்தனை பேரின் தாகம் தீர்க்க நீர்மோர், தண்ணீர் பந்தல்களும் பசியை போக்க அன்னதானங்களுக்கும் தாராளமாக வழங்கப்படுகிறது. இதே போல பங்குனி உத்திரம் நாளிலும் குதிரை சிலைக்கு பல நூறு காகிதப் பூ மாலைகளை பக்தர்கள் அணிவிக்கின்றனர்.
குதிரை ஏறாத மக்கள்;

குளமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் தங்கள் உறவுமுறை சுப நிகழ்ச்சிகளுக்கு தாய் மாமன் சீர் கொண்டு செல்லும் தாய்மாமன்கள் நாட்டியக் குதிரைகளோடு சீர் கொண்டு போனாலும் அந்த குதிரை மீது ஏறிச் செல்லமாட்டார்கள். குதிரை பெரிய கோயில் அய்யனாரின் வாகனம் அதில் அய்யனைத் தவிர வேறு யாரும் ஏறக்கூடாது என்று குதிரை ஏறுவதை இன்றளவும் தவிர்த்துவரும் அய்யனாரின் பக்தர்கள் தான் ஊரெல்லாம் நிறைந்திருக்கிறார்கள்.
தெப்பம்;
மாசிமகத்தின் அடுத்த நாள் நடக்கும் தெப்பத் திருவிழாவிலும் இப்படித்தான் பக்தர்கள் கூட்டத்தைக் காணமுடியும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகன் அய்யனாரைக் காண கீரமங்கலம் மெய்நின்றநாதரும் ஒப்பிலா மணி அம்பிகையும் 7 கி.மீ பல்லக்கில் வந்து பொற்றாமரை தீர்த்தக்கரையில் நின்று நீராடவரும் அய்யனாரை பார்த்து புது பட்டாடைகள் கொடுத்துவிட்டு கீரமங்கலம் திரும்பிச் செல்வதும். தாய் தந்தையின் புத்தாடையை அணிந்து கொண்டு மின்விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அய்யன் உலா வருவதும் வழக்கம். இரவு நேரங்களில் மின்விளக்குகளால் ஜொளிக்கும் ராட்டினங்கள், சர்க்கஸ்கள், பாசி, பவளம், மிட்டாய்க் கடைகள் ஏராளம். கலைநிகழ்ச்சிகளும் தாராளம். இந்த நாட்களில் வெளிநாடு, வெளியூர்களில் இருக்கும் உள்ளூர்காரர்கள் தவறாமல் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்பதே சிறப்பு. இரண்டு நாள் திருவிழாவே மிகப் பிரமாண்டம்.
கொரோனாவிலும் நடந்த ஒரே திருவிழா;
கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதால் திருவிழாக்கள் போன்ற விழாக்கள் நிறுத்தப்பட்டது. ஆனால் அந்தக் காலத்தில் கூட அய்யனார் தன் வாகனமான குதிரை சிலைக்கு மாலை வாங்குவதை நிறுத்தவில்லை. மாசிமகம் நடக்கும் காலத்தில் எந்தவித தடைகளும் விதிக்கப்படுவதில்லை. சுற்றியுள்ள கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் தடைப்பட்டாலும் பெரியகோயில் திருவிழா மட்டும் தடைப்படவில்லை என்ற பெருமையோடு பேசுகிறார்கள்.
திருப்பணிகள்;
பிரமாண்ட குதிரை சிலை இருந்தாலும் சின்னதாய் இருந்த கோயிலை திருப்பணி செய்ய வேண்டும் என்ற பக்தர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக இந்துசமய அறநியைத்துறை அனுமதியுடன் முன்னாள் அமைச்சர் வடகாடு அ.வெங்கடாசலம் தலைமையில் கிராமத்தினர், பக்தர்கள் ஒத்துழைப்போடு முண்மண்டபம் கட்டி திருப்பணி முடித்து 2010 ம் ஆண்டு மே 22 ந் தேதி குடமுழுக்கு செய்யப்பட்டது. அதே போல கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு அப்போதைய குளமங்கலம் வடக்கு, குளமங்கலம் தெற்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிகள், கிராமத்தினர் முன்னிலையில் திருப்பணிகள் நடந்து முடிந்து கோயில், பிரமாண்ட குதிரை சிலை, பரிவார தெய்வங்களுக்கு 2024 ஜூன் 16 ந் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதில் வழக்கம் போல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு மாசிமகத் திருவிழா மார்ச் 12 ந் தேதி நடக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு திருப்பணிக்காக மாலைகள் நிறுத்தப்பட்டிருந்ததால் இந்த ஆண்டு மாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு நாள் முன்னதாக ஊர் மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களின் மாலைகளை அணிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வழக்கம் போல ராட்டினங்கள், சர்க்கஸ்கள் வந்துவிட்டது.
வழித்தடம்;
அறந்தாங்கி - கீரமங்கலம் சாலையில் பனங்குளம் தெற்கு, குளமங்களம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கோயில் நுழைவாயில் வழியாக 3 கி.மீ. பனங்குளம் பாலத்தில் இருந்து நுழைவாயில் வழியாக 2 கி.மீ. கொத்தமங்கலம் - குளமங்கலம் வடக்கு நுழைவாயிலில் இருந்து 3 கி மீ. மேற்கே மறமடக்கி, திருநாளூரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது.