தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் கலந்து கொண்டன. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தின் வீராங்கனையாக திண்டுக்கல் ஜி.டி.என்.கலைக்கல்லூரியின் உடற்கல்வித்துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி கலைவாணி குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டார். இந்த குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இப்படி தெற்காசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி கலைவாணி திண்டுக்கல்லுக்கு வந்தார். அவரை பாராட்டி வரவேற்கும் வகையில் திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டு வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே கல்லூரி மாணவிகள் பெருந்திரளாக நின்றனர். அங்கிருந்து ஜி.டி.என். கலைக்கல்லூரி வரை தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்ல தயாரானார்கள். இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு கால்பந்தாட்ட மாநிலத் துணைத் தலைவரும், விளையாட்டுத்துறையின் தந்தையுமான ஜி.சுந்தரராஜன் துவங்கி வைத்தார். அதன்பின் திறந்த ஜீப்பில் மாணவி கலைவாணியை மாணவர்கள் தாரை, தப்பட்டை முழங்க ஐந்து கிலோ மீட்டர் தூரமுள்ள ஜிடிஎன் கல்லூரி வரை வரவேற்று அழைத்துச் சென்றனர். அப்போது வழிநெடுகிலும் அங்கங்கே கல்லூரியில் உள்ள விளையாட்டு சங்கத்தை சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் மாணவியை பாராட்டி மாலை, சால்வை போட்டு வரவேற்று அனுப்பி வைத்தனர். அதன்பின் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நுழைந்த மாணவி கலைவாணியை கல்லூரியின் செயலாளரும், தாளாளருமான லயன் டாக்டர் கே.ரத்தினமும், இயக்குனருமான துரைரத்தினமும் வாழ்த்தி வரவேற்று தங்கச்செயின் பரிசாக வழங்கினார்கள். அதன்பின் கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி கலைவாணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த பாராட்டுவிழாவில் கல்லூரிச் செயலாளரும், தாளாளருமான கே.இரத்தினம் கலந்து கொண்டு பேசும்போது, நம்முடைய கல்லூரி தமிழகத்தில் என்ன, பல்லைக்கழகத்தில் என்ன, இந்தியாவில் என்ன உலகத்திலேயே முதல் கல்லூரியாக வருவதற்கு நான் காரணமாக இருப்பேன் என்று அருமை மகள் கலைவாணி கூறியதை கேட்டு கண்கலங்கிவிட்டேன். வாழ்த்துகிறேன். அதுபோல் என்னைப் பொறுத்தவரை கலைவாணியும், அவருடைய குழுவினரும் எதிர்காலத்தில் அந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு தங்கப்பதக்கங்களை பெற்று தங்கமகளாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். எதிர்காலத்தில் இதுபோல் தங்கமங்கைகள் கல்லூரிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று சாதனை படைக்க வேண்டும் அதுபோல கலைவாணியின் பெற்றோருக்கும் எனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் பேசிய மாணவி கலைவாணியோ... தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வாங்கியதற்கு முழுக்காரணமே எங்களுடைய கல்லூரி செயலாளரும், இயக்குனரும்தான் அந்த அளவுக்கு என்னை கல்வியிலும், விளையாட்டிலும் ஊக்கப்படுத்தி தேவையான பொருள் உதவிகளும் செய்தனர். அதன்மூலம் தான் நான் தெற்கு ஆசியப்போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றேன் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோல் எனது தந்தை எனக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து உற்சாகப்படுத்தியதால்தான் நான் தங்கப்பதக்கம் பெற முடிந்தது. மேலும் இதுபோல பல பதக்கங்களை பெறுவதற்கும் நான் முயற்சி செய்வேன் என்று கூறினார். இந்த பாராட்டுவிழாவில் கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன், கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, துணை முதல்வர் நடராஜன், உடற்கல்வி இயக்குநர் ராஜசேகரன் மற்றும் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் அரசன்எஸ்.சண்முகம், மத நல்லிணக்க காவலர் நாட்டாண்மை காஜாமைதீன், திபூர்சியஸ் மற்றும் பேராசிரியர்களும், உடற்பயிற்சி ஆசிரியர்களும், மாணவ,மாணவிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்!