தேர்தலை முன்னிட்டு திமுக மண்டல மாநாடுகளை நடத்தத துவங்கியது. அதன்படி மார்ச் 17ந்தேதி வேலூரில் மண்டல மாநாட்டை நடத்த முடிவு செய்தது. இதற்கான பொறுப்பை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனிடம் ஒப்படைத்துள்ளார் தலைவர் ஸ்டாலின்.
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திமுக மண்டல மாநாடு நடைபெறுகிறது. அது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், வேலூரில் மாநாடு எங்கு நடத்துவது, எப்படி நடத்துவது என்பதோடு, கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையேற்றி அவர்களையும் பேசவைக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதனால் அதற்கு தகுந்தார்போல் கூட்டத்துக்கான மேடை அமைப்பது, தொண்டர்களை திரட்டிவருவது போன்ற பணிகளை கவனிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.
விருதுநகரை மிஞ்சும் வகையில் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவது என முடிவு செய்து வேலூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட அணைக்கட்டு அருகே கந்தநேரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 200 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மாநாடு நடத்த பூர்வாங்க பணிகளை இன்று மா.செ நந்தகுமார் தலைமையிலான கட்சியினர் தொடங்கினர்.
அந்த நிலத்தை சீர் செய்யும் பணிகளை செய்து வந்ததை திடீரென மார்ச் 11ந்தேதி மாலை நிறுத்திவிட்டனர். இது கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுப்பற்றி கட்சி நிர்வாகிகள் சிலர் நம்மிடம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் வேட்பாளர் தேர்வு, அறிவிப்பு, தலைவர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம், தொகுதி பிரச்சாரம், இடைத்தேர்தல் பிரச்சாரம் போன்றவை செய்ய தலைவர்கள் டூர் புரோகிராம் தயாராவதால் மண்டல மாநாடுகளை திமுக ரத்து செய்ய தலைமை முடிவு செய்துள்ளது, அதனை அறிந்தே பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மண்டல மாநாட்டுக்கு பதில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.