டெல்லியில் கடந்த மார்ச் 11- ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை இஸ்லாமியர்கள் பங்கேற்ற மாநாடு டெல்லி மாநிலத்தில் நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்றது.இதில் பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 3000- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அவர்கள் சமீபத்தில் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லி சென்று திரும்பிய பலருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத்துறையினர், டெல்லி சென்று திரும்பி பட்டியலில் வராதவர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் 63 பேர் கலந்து கொண்டுள்ளனர்.அவர்களில் 55 பேரை நோய்த் தடுப்பு குழுவினர் கண்டறிந்து அவர்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களைத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அவர்கள் அனைவரும் கரோனா தடுப்பு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு மருத்துவமனையில் இருக்கும் சிலர் திருச்சி அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் காலாவதியான மருத்துவப் பொருட்களை வைத்து டெஸ்ட் எடுக்கிறார்கள்.இதன் மூலம் நோயின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியாது என்கிற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
இது குறித்து நாம் திருச்சி மருத்துவமனையில் உள்ளவர்களிடம் செல்போனில் பேசிய போது அவர்கள் நம்மிடம், "சளி, உமிழ்நீர், ரத்த மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு எடுக்கிறார்கள்.ஆனால் அந்த மருத்துவப் பொருட்கள் எல்லாம் 2012, 2010, என ஆண்டுகள் முடிந்த மருத்துவப் பொருட்களாக உள்ளது.
இதை எப்படி நாங்கள் உண்மை என்று நம்ப முடியும்,அவர்கள் மேல் இருந்த நம்பிக்கை எங்களுக்குப் போய் விட்டது. இல்லை என்றால் காசு கொடுத்து வெளியில் இருந்து பொருட்களை வாங்கி எங்களுக்கு நம்பிக்கையான மருத்துவர்களை அழைத்து வந்து பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறோம்" என்றார்.
நாம் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசனிடம் பேசினோம்.அவர் "WHO அறிவுறுத்தலின் படி தான் ஆய்வு செய்கிறோம்,மருத்துவப் பொருட்கள் கிடையாது.காலாவதியாக இன்னும் 6 மாதம் இருக்கிறது.எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் திருவாரூரில் ஆய்வக வசதி இல்லை என்பதால் விழுப்புரத்திற்கு அனுப்பியிருக்கிறோம்" என்றார்.
இதற்கிடையில் திருச்சி லால்குடியில் உள்ள தாளக்குடி பகுதியில் 4 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்ததால், அந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.மேலும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் சுகாதாரத் துறையினர்.