உலகம் முழுவதும் நாளை மறுநாள் (01-01-24) ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது. 2024ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகின்றனர். பல்வேறு முக்கிய நகரங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நாளை (31-12-23) இரவே தொடங்கிவிடும். குறிப்பாக சென்னையில் நாளை (31-12-23) இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்ட உள்ளது. அதே வேளையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கவும், மக்கள் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடவும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதித்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கடற்கரையில் நாளை (31-12-23) இரவு 10 மணி முதல் மறுநாள் (01-01-24) காலை வரை புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதிப்பட்டுள்ளது.
இந்த தடையும் மீறி யாரேனும் செயல்பட்டால், பொதுமக்கள் காவல்துறைக்கு புகார் தெரிவிக்கலாம். அதன்படி, புகார் தெரிவிக்க அவசர கட்டுப்பாட்டு எண் 100 மற்றும் 7010363173 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.