கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோடு முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(63). இவர் விருத்தாசலம் தபால் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி அம்பிகா பெண்ணாடம் அருகே உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அன்பழகன் கடந்த 6ம் தேதி அன்று தனது மனைவியுடன் ஒடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளனர். கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை 03.00 மணியளவில் திரும்பி வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சமையல் அறையில் இருந்த ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கை அறை மற்றும் பூஜை அறையில் இருந்த இரண்டு பீரோக்கள் மற்றும் படுக்கையறை கட்டிலில் உள்ள ரேக்குகளும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 20 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 6 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அன்பழகன் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் சமையல் அறையில் இருந்த ஜன்னல் கதவை சிறிய கடப்பாரையால் திறந்து, அதிலுள்ள ஜன்னல் கம்பியை கழட்டிவிட்டு, உள்ளே புகுந்துள்ளனர். மேலும் அன்பழகன் வீட்டை பூட்டி விட்டு சென்று வந்ததிலிருந்து பத்து நாட்கள் ஆன நிலையில், எப்போது இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது என்பது குறித்து தெரியவில்லை. இதனால் குழப்பமடைந்துள்ள போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.