இரணியன் அல்லிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவர் சேலம் சிறையில் 14 ஆண்டுகளாக இருக்கிறார். இவரை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக செந்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரகன் தலைமையிலான அமர்வு முன் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், இவரை விடுதலை செய்தால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் விடுதலை செய்யவில்லை என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதை கேட்டு டென்ஷன் ஆன நீதிபதி கிருபாகரன், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்கிறீர்கள். ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் அனுபவித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றால், அது அனைவருக்கும் பொருந்தும். இவரை விடுதலை செய்ய வேண்டும் என்றதற்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று சொல்கிறீர்கள். தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்யும் நீங்கள், பேரறிவாளன் உள்பட ஏழு பேர் கைதாகி 23 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய மறுக்கிறீர்கள். இதையெல்லாம் எந்த சட்ட அடிப்படையில் முடிவு செய்கிறீர்கள்? எப்படி முடிவு செய்கிறீர்கள்? சட்டம் என்பது ஒன்று தானே? அது அனைவருக்கும் பொருந்தக்கூடியது தானே? ஆகவே நீங்கள் இதற்கு உரிய பதில் தர வேண்டும் என்றார்.
இந்த விவகாரம் மிகப்பெரிய சட்ட சிக்கலை உருவாகியுள்ளது. தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதான அதிமுகவினரை விடுவித்ததும், பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்யாமல் இருப்பதும், இதே போல் சந்தர்ப்பவசத்தால் குற்றம் செய்து சிறையில் உள்ள குற்றவாளிக்கு விடுதலை தராமல் இருப்பதும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் எனபது தொடர்பான விவகாரம் தொடர்பான மனு ஆளுநரிடம் உள்ளது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்போகிறதா? கவர்னரிடம் இதுதொடர்பாக மனு இருக்கிறது என்றால், அதனை கவர்னர் எவ்வளவு காலம் வைத்திருக்கலாம்? அதற்கு என்ன கால அளவு? அதற்கு என்ன சட்டப்பிரிவு? என நீதின்றம் கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என்ற பயத்தில் தமிழக அரசு அதிகாரிகள் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர்.