புதுச்சேரி நகர பகுதியில் 3 சிறுமிகளை அடைத்து வைத்து ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக பெரியகடை காவல்நிலையத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு புகார் செய்யபட்டது. அதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் 2 சிறுமிகளை மீட்டனர்.
அந்த சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில், காவல்துறையைச் சேர்ந்த சிலரும் தங்களை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினர். அதையடுத்து அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. மேலும் அந்த விபசாரக் கும்பலிடம் இருந்து 2 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
தீவிர விசாரணையில் சிறுமிகளை அடைத்து பாலியல் தொழில் செய்வதற்கு போலீசார் உடந்தையாக இருந்ததும், போலீஸ் ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும், தெரியவந்தது.
அதையடுத்து சிறுமிகள் பலாத்கார வழக்கில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அனுஷா பாஷா, பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன், போலீஸ் ஏட்டுகள் குமாரவேலு, பண்டரிநாதன், போலீஸ்காரர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகிய 9 பேர் மற்றும் புரோக்கர்கள் புஷ்பா, ரகுமான், அருள்மரி உள்பட 18 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பரபரப்பான இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தலைமறைவாக இருந்த 8 காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் அனைவரும் ஜாமீன் பெற்ற நிலையில் புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 18 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தனபாலன் உத்தரவிட்டார்.
ஊரறிந்த கொடூர சம்பத்தில் தொடர்புடையவர்கள் காவல் துறையினர் என்பதால் போதிய ஆதாரங்களை காவல் துறை சமர்பிக்காததால் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து புதுச்சேரி போராளிகள் அமைப்பை சேர்ந்த சுந்தர் நம்மிடம், இந்த கொடூர சம்பவம் நடக்கும்போது அந்த சிறுமிகள் பதிமூன்று பதினான்கு வயது அளவில்தான் இருந்தார்கள் எனவே அதில் தொடர்புடைய குற்றவாளிகளை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்திருக்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டி அதன் அடிப்படையிலேயே குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டனர் அப்படி இருக்கும்போது குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்திருப்பது சட்டத்தின் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. காவல்துறை குற்றவாளிகள் தமது துறையை சார்ந்தவர்கள் என்பதற்காக குற்றப்பத்திரிக்கை முறையாக தாக்கல் செய்யவும் ஆதாரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் அளிக்காததால் குற்றவாளிகள் தப்பியுள்ளனர் எனவே இது காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையும் மோசடியும் தோலுரித்துக் காட்டுகிறது" என்றார்.
வேலியே பயிரை மேய்ந்தது என்பார்கள் இங்கோ குற்றம் புரிந்தவர்களை வேலிக்குள் வைத்து பாதுகாத்து உள்ளார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி அநீதி ஆகிப்போனது சமூக அவலத்திற்கு எடுத்துக்காட்டாகும்