திருவாரூர் மாவட்டத்தில் தன்னுடைய மகள் கோபப்பட்டு பேசாம இருந்ததால், குளத்தை தூர் வாரி உள்ளார் அந்த பெண்ணின் தந்தை. இதனால் அந்த பெண்ணையும் அவரது தந்தையையும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள். இது பற்றி விசாரித்த போது, திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு பக்கத்தில் இருக்கும் மருதவனம் காலனி தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார். இவருடைய மனைவி அருள்மொழி. சிவக்குமாரும், அவரது மனைவியும் அப்பகுதியில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்,விவசாய வேலை இல்லாத நேரங்களில் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்கிறார்கள். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவரும் மருதவனம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மகன் விவேகானந்தன் பத்தாம் வகுப்பும், மகள் நதியா ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய கஜா புயலின் போது சிவகுமாரின் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் வீடு இல்லாமல் சிவக்குமார் குடும்பத்தினர் இருந்துள்ளனர். கஜா புயலுக்கு பிறகு சிவக்குமாருக்கு விவசாய வேலையும், கூலி வேலையும் கிடைக்காமல் வறுமையில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலுடன் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் மீது சண்டை போட்டுள்ளார். குறிப்பாக அவரது மனைவியிடம் அடிக்கடி சண்டைப் போட்டுள்ளார். சிவக்குமார் தினமும் மனைவி கூட சண்டை போடுவதை பார்த்த அவரது மகள் நதியா சிவகுமாரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். தனது மகள் கோபப்பட்டு சில நாட்களில் பேசி விடுவார் என்று நினைத்த சிவக்குமாருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. கோபமான நதியா 8 மாதங்களுக்கு மேல் தனது தந்தை சிவக்குமாரிடம் பேசவில்லை. தனது மகள் தன்னிடம் 8 மாதங்களுக்கு மேல் பேசாமல் இருப்பதை நினைத்து மிகவும் மனம் வருத்தியுள்ளார் சிவக்குமார்.
பின்பு தனது மகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அப்போதும் தனது தந்தையை மன்னிக்கவில்லை. பின்பு நான் என்ன செய்தால் என்னுடன் நீ பேசுவாய் என்று தனது மகளிடம் கேட்டுள்ளார் சிவக்குமார். அதற்கு நதியா இனிமேல் அம்மாவிடம் நீங்கள் சண்டை போடக் கூடாது. அப்புறம் நான் படிக்கும் பள்ளி அருகே உள்ள கருங்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் அபோது தான் நான் உங்களிடம் பேசுவேன் என்று கூறியுள்ளார். தன் மகள் நதியாவுக்காக சிவக்குமார் சாப்பிடாமல் கூட குளத்தைச் சுத்தம் செய்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் சேர்ந்து சுத்தம் செய்துள்ளார். இதன் பிறகே அவரது மகள் நதியா தனது அப்பா சிவக்குமாரிடம் பேசியுள்ளார். சிவகுமாரும் அவரது மனைவியும் குளத்தை சுத்தம் செய்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு கணவன், மனைவி சண்டையை அவரது மகள் இவ்வளவு எளிதாக சமாதானம் செய்தது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.