
தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்திருந்தார்.
இதுகுறித்து வெளியான தகவலில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் அதேநேரம் தற்பொழுது அதிமுகவில் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும், திரைமறைவில் இந்த சந்திப்பு நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுமா என்ற கேள்விக்கு 'பாஜக கிஜக என எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி குறித்த தகவல்கள் இன்னும் ஆறு மாத காலத்திற்கு பின்னர் தெரியவரும். நாங்களே செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணி குறித்து தெரிவிப்போம்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.