
தமிழகம் முழுவதும் சுமார் 450க்கும் மேற்பட்ட துப்புரவு ஆய்வாளர் (சானிட்டரி இன்ஸ்பெக்டர்) பணிக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 9 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்றவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சந்தித்து பணி நியமன ஆணையை கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது இதுகுறித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தேடிச் சென்று வழங்குகிறது. ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின் போது நூற்றுக்கணக்கானோருக்கு வேளாண்துறையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்பு அதிமுக ஆட்சியில் பத்து வருடங்களாக எந்த ஒரு அரசு வேலைவாய்ப்பும் முறையாக வழங்கவில்லை. முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்த முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தான் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதோடு ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.
கடந்த வருடம் ஆத்தூர் தொகுதியில் 115 பேருக்கு நியாய விலைக்கடைகளில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின்பு ஓட்டுநர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணி நியமனம் வழங்கப்பட்டது. தற்போது ஆத்தூர் தொகுதியில் 9 பேருக்கு துப்புரவு ஆய்வாளருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், பணி நியமன ஆணை பெற்றவர்கள் பொதுமக்களிடம் அன்பாக நடந்து சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.