
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொத்தாக கோட்டை பேருந்து நிறுத்தத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பொதுத்தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் செல்ல காத்திருந்துள்ளார். அப்போது ஆலங்காயத்தில் இருந்து வாணியம்பாடி செல்லும் அரசு பேருந்து ஒன்று கொத்தாக கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. அதே சமயம் பொதுத்தேர்வு எழுத வேண்டுமே என்ற பதட்டத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து பின்னாடியே துரத்திக் கொண்டு மாணவி ஓடியுள்ளார்.
இதனைக் கவனித்த பின்னால் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் பேருந்தை நிறுத்துமாறு ஹாரன் அடித்துள்ளனர். அதன்பின்பு பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தள்ளி ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். அதிகளவில் பயணிகள் இல்லாமல் காளியாகவே சென்றபோதும் ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை நிறுத்தாமல் அலட்சியமாக சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் பேருந்தை நிறுத்தாமல் அலட்சியமாக சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அரசு பேருந்து போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.