
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த 2 புனிதத் தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் எனத் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி கடந்த 4ஆம் தேதி (04.02.2025) போராட்டம் நடத்த உள்ளதாக இந்து அமைப்பினர் அறிவித்ததிருந்தனர். இந்த போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இத்தகைய சூழலில், கடந்த 2ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர், 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால் தடையை மீறி வெளி மாவட்டங்களில் இருந்து வந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்து அமைப்பினர் சார்பில் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இந்த வழக்கில் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தன் பேரில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்ட 144 தடை உத்தரவை நீக்கக் கோரியும், இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என காவல்துறை வெளியிட்ட செய்தியறிக்கையை ரத்து செய்யக் கோரியும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. மதுரையை சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு, நீதிபதிகள் நிஷாப் பாணு மற்றும் ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் கூறியதாவது, ‘இருதரப்பினரும் திருப்பரங்குன்றம் மலையை உரிமை கோரி சண்டையிடுவதால் இந்த விவகாரத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘மக்கள் சண்டையிடவில்லை என்றாலும், நீங்கள் சண்டை போட வைத்துவிடுவீர்கள் போல்’ என்று கருத்து தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.