Skip to main content

எழுத்தாளர் இமயத்திற்கு முக்கிய பதவி; தமிழக அரசு அறிவிப்பு!

Published on 21/02/2025 | Edited on 21/02/2025

 

TN govt announcement Important post for writer imayam

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் , செல்வகுமார், ஆனந்தராஜா, பொன்தோஸ் மற்றும் இளஞ்செழியன் ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசு செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய நலனை பாதுகாக்கவும். 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம்' அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாணையத்தில் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் முடிவுபெற்ற நிலையில், தற்போது நீதியரசர் ச.தமிழ்வாணன் தலைவராகவும் மற்றும் ஜெ. ரேகாபிரியதர்ஷினி, உறுப்பினராகவும் பணிபுரிந்துவருகின்றனர். எனவே. இவ்வாணையத்திற்கு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமயம் (வெ. அண்ணாமலை) துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செ. செல்வகுமார், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சு. ஆனந்தராஜா, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மு. பொன்தோஸ் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பொ. இளஞ்செழியன் ஆகியோர்களை உறுப்பினர்களாக நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்