கொடிய வாழ்வில் நிலையாக மாறிப் போயுள்ளது இந்த கரோனா வைரஸ் காலம், அடுத்து என்ன என்கிற மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியை எல்லா மட்டத்திலும் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் ஊடகத்தில் பணிபுரிவோர்கள் அதாவது செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளது. இப்போது பொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு பத்திரிகையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதில் தமிழக அரசு ஒரு அறிவிப்பை கொடுத்து செயல்படுத்தியது. அது என்னவென்றால் இந்த கரோனா வைரஸ் காலத்தில், இந்த நெருக்கடி நேரத்தில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு அரசு சார்பில் 3000 ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. அரசின் அறிவிப்பு அரசு நிர்வாக அமைப்புப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் அங்கீகாரம் செய்த பத்திரிகையாளர்களுக்கும் மட்டும் 3000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கப்பெற்றது.
பெரும்பாலும் மாவட்ட தலைநகரங்களில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை போய் சேர்ந்தது. இதில் மாவட்ட தலைநகரையடுத்துள்ள ஏரியா செய்தியாளர்கள், தாலுகா செய்தியாளர்கள் பலருக்கும் இந்த நிதி கிடைக்கவில்லை. காரணம் தாலுகா செய்தியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைமுறையில் இல்லை என அரசு நிர்வாக அமைப்பு அவர்களை விடுவித்தது. ஆனால் பத்திரிகை துறையில் பல ஆண்டு காலம் பணிபுரிந்து வருகிறார்கள் தாலுகா அளவில் உள்ள ஆயிரக்கணக்கான செய்தியாளர்கள். அவர்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்கப் பெறவில்லை.
இதை கருத்தில் கொண்ட ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதன்படி மாவட்ட தலைநகர் மற்றும் தாலுகா அளவில் அரசு நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு, குறிப்பாக அரசு நிவாரண உதவி விடுபட்டவர்களுக்கு உதவ வேண்டுமென திட்டமிட்டு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டும் சங்கத்தின் நிதியிலிருந்து தலா ரூபாய் 2000 கொடுக்கலாம் என தீர்மானித்து.
அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகளான தலைவர் ரமேஷ், செயலாளர் ஜீவா தங்கவேல், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் இச்சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாட்டின்படி, ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை விடுபட்ட சுமார் 60 பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் அரசு நிவாரண உதவி கிடைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் வேண்டுகோள், ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கே முன்னுதாரணமாக ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில், விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு தலா ரூபாய் இரண்டாயிரம் கொடுத்து, அவர்களையும் ஊக்கப்படுத்தி, நம்பிக்கையை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.