ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து தாளவாடி மலைபகுதி தொடங்குகிறது. இதில் உள்ள திம்பம் மலைப்பாதையில் பாறையில் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் உயிரிழந்தார். இதனால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கிடையே 7 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து பெரிய வெங்காயம் மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி கோவை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. லாரியை திருப்பூர் திருக்குமரன் நகரை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் ஓட்டி வந்தார்.
நேற்று காலை திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து சென்றன. வெங்காய பாரம் ஏற்றி வந்த லாரி 26 மற்றும் 25 ம் கொண்டைஊசி வளைவுகளுக்கிடையே உள்ள சாலையில் சென்றபோது கடும் பனி மூட்டம் காரணமாக எதிரே வழி தெரியாததால் சாலையோரத்தில் இருந்த பாறை மீது லாரி மோதியது. இந்த விபத்தில் முன்புற கேபினுக்குள் இருந்த டிரைவர் ஸ்ரீதர் உள்ளே சிக்கிக்கொண்டார். லாரி பாறையில் மோதி விபத்து ஏற்பட்டதோடு மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கி நீண்ட வரிசையில் நின்றன.
இதுகுறித்து தகவல் கேட்டு வந்த ஆசனூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று லாரியின் முன்பகுதியில் சிக்கிய டிரைவரை மீட்டு 108 ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் உயிரிழந்தார்.கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி நகர்த்தப்பட்டது. லாரியில் இருந்த வெங்காய முட்டைகள் சிதறியதால் தொழிலாளர்கள் வெங்காயத்தை எடுத்து மீண்டும் மற்றொரு லாரியில் லோடு ஏற்றினர். மதியம் 12 மணியளவில் போக்குவரத்து சீரானது. கடந்த பல நாட்களாக திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் தினமும் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாக இருமாநிலங்களுக்கிடையே பயணிக்கும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு கனரக வாகனங்களை இவ்வழியில் விடுவதால்தான் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்கிறார்கள் மக்கள்.