தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் செயலாளர் நல்லசாமி தலைமையில் நேற்று ஈரோட்டில் நடந்தது.
மரங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் வகையில், மரங்களில் விளம்பர பேனர் வைத்தால், மூன்றாண்டு சிறை தண்டனை . ரூ.25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள இந்த அமைப்பு மேலும் தங்களது வேண்டுகோளாக , இதை வெறும் அறிவிப்பாக மட்டும் வைக்காமல், உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பை, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த, தமிழக அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் இந்திய நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில் இறக்குமதியாகும் எண்ணெயின் பங்கு, 70 சதவீமாக உள்ளது. கடந்த 2017–18 ம் பருவத்தில், 1.46 கோடி டன் சமையல் எண்ணெய் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டது. நடப்பு பருவத்தில் இறக்குமதி, 12 சதவீதம் உயர்ந்து, 1.64 கோடி டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், பாமாயில் ஒரு கோடி டன்னாகவும், சோயா எண்ணெய், 35 லட்சம் டன்னாகவும், சூரியகாந்தி எண்ணெய், 26 லட்சம் டன்னாகவும், இதர எண்ணெய், மூன்று லட்சம் டன்னாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இறக்குமதி பாமாயில், கிலோவுக்கு, 35 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, 25 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
அதேநேரம், இந்தியாவில் விளையும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்கப்படுவதில்லை. ரேஷன் கடைகளில் வினியோகிப்பதும் இல்லை. இதை நடைமுறைப்படுத்தினால், இந்திய விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்.
இதை நடைமுறைப்படுத்த வேண்டும், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.