
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி வந்தனர். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது.
ஏற்கனவே பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் இந்த விவகாரமும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை பேச்சின் எதிரொலியாக திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு திருச்சி சிவா அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஆபாச சர்ச்சை பேச்சு காரணமாக பொன்முடியின் துணைச் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்காக தனது நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும் என்றும், தலைவர் எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்றும் தனது அறிக்கையில் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (17.04.2025) மாலை 6 மணியளவில் 20வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், முதல்வரின் தனிச் செயலாளர்கள் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அப்போது, அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தாமல் செயல்படுங்கள் என அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.