மக்களின் வங்கி கணக்கிலிருந்து கோடிக்கணக்கான ரூபாயை அபேஸ் செய்த புதுச்சேரி ஏ.டி.எம். கொள்ளை கும்பலின் தலைவன் சந்துருஜீ போலீசாரின் 80 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு ஒருவழியாக சென்னை - கிண்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து அண்மையில் (11/7/18) கைது செய்யப்பட்டான்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரி சிபி.சி.ஐடி போலீசாருக்கு 'சந்துருஜீ சென்னையில் வர இருக்கிறான்' என கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சென்னைக்கு விரைந்து கண்காணிப்பில் இறங்கியுள்ளனர். அதன் மூலம் சந்துருஜீ சென்னையில் உள்ள நண்பர்களின் உதவியோடு அவனது உறவினரின் வீட்டுக்கு வந்து பதுங்க இருப்பதாக உறுதி செய்து கொண்ட போலீசார் அங்கேயே வெயிட்டிங்கில் இருந்துள்ளனர்.
நண்பகல் பொழுதில் சந்துருஜீ அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் சினிமா பட பாணியில் அதிரடியாக சந்துருஜீயை சுற்றி வளைத்து கைது செய்து, மாலையே புதுச்சேரி மாநில நீதிபதி முன்னிலையில் சந்துருஜீயை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கொள்ளை விவகாரம் குறித்து கடந்த மாதம் நம் ‘நக்கீரன்’ பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் சந்துருஜீயின் கைது படலத்தையும், இந்த கொள்ளை குறித்தும் நம்மிடம் விவரிக்கின்றனர் புதுச்சேரி சிபிசிஐடி போலீசார்,
"கடந்த ஏப்ரல் மாதத்தில் எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வந்த இன்டர்நெட் சென்டரில் ரைடு மேற்கொண்டோம். அதன் மூலம் போலி ஏடிஎம் கார்ட் தயார் செய்த பாலாஜி, ஜெயச்சந்திரன், டாக்டர் விவேக் என பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தோம். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதிமுக பிரமுகர் சந்துருஜீக்கும் இந்த கொள்ளையில் தொடர்புள்ளது என்பதை தெரிந்து கொண்டு அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினோம்.
இருந்தாலும் அவரை பிடிக்க எங்களுக்கு சவாலாக இருந்தது. அடிக்கடி அவரது இருப்பிடத்தை மாற்றி கொண்டே இருந்ததால் எங்களது தேடுதல் வேட்டையில் சற்று தொய்வு இருந்தது. இருப்பினும் விடாமல் அவரை எங்களது சைபர் க்ரைம் பிரிவின் துணையோடு துரத்தி தற்போது கைது செய்துள்ளோம். இந்த 80 நாட்களில் இதுவரை சந்துருஜீ நூற்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை மாற்றியதாலும், வாட்ஸ் அப் மூலமாக மட்டுமே அவனுக்கு வேண்டப்பட்டவர்களிடம் பேசி வந்ததாலும் செல் போன் மூலம் அவனை டிரெஸ் செய்வதில் எங்களுக்கு சிக்கல் இருந்தது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவனை புதுச்சேரி முதன்மை மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். கூடிய விரைவில் அவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி இந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, அரசியல் பிரமுகர்களின் தலையீடும் இதில் உள்ளதா என்பதெல்லாம் தெரியவரும்" என போலீசார் தெரிவித்துள்ளனர்.
'இந்தியா மட்டுமில்லாம அமெரிக்கா, டென்மார்க், சுவீடன், ஜப்பான், இத்தாலி, பெல்ஜியம் என வெளிநாட்டு மக்களோட வங்கி கணக்கிலிருக்கும் பணத்தை இந்தியாவில் இருந்தபடியே போலி ஏடிஎம் கார்டுகள் பயன்படுத்தி திருடினோம். எனது கூட்டாளிங்களுக்கு POS மெஷினை என்னோட பேர்ல வாங்கி கொடுத்ததோடு, போலி ஏடிஎம் கார்ட் ஆப்பிரேட் ஆவதற்கு தேவையான தகவலை வெளிநாட்டு வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் ஹேக்கர்கள் மூலமாக காசு கொடுத்து வாங்கியும், உள்நாட்டு வங்கி கணக்குகளுக்கு ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் மெஷின் வைத்தும் இரண்டு வழியில் ஒவ்வொரு வங்கி கணக்கிலிருந்தும் பணத்தை கொள்ளை அடித்தோம். நாங்கள் கொள்ளை அடித்த வங்கிகளில் பல வெளிநாட்டு வங்கிகள் தான். அதிலும் அமெரிக்கா நாட்டை சேர்ந்த வங்கிகள் தான் அதிகம். அதே போல நாங்கள் தகவல்களை பெரும் கார்டுகளும் கிரெடிட் கார்டுகள் தான். அப்படி தான் பல கோடி ரூபாயை திருட்டு மூலமாக நான் சம்பாதித்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்தேன்' என கைதான பிறகு சந்துருஜீ போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் நமக்கு போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
"சந்துருஜீ மற்றும் அவனது கூட்டாளிகள் இதுவரை யார் யாருடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளை அடித்துள்ளனர் என நாங்கள் உறுதி செய்துள்ளோம். அதன் மூலம் உள்நாடு, வெளிநாடு என பணத்தை இழந்த மக்களையும், அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியையும் போன் மற்றும் ஈமெயில் மூலமாக தொடர்பு கொண்டு இந்த தகவலை சொல்லியுள்ளோம். இந்த கொள்ளைக்கு பின்னால் சர்வதேச ஹேக்கர்களுக்கும், கொள்ளைகாரர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால் சர்வதேச போலீசாரோடு சேர்ந்து நாங்கள் கடமையாற்ற உள்ளோம். சந்துருஜீயிடம் நடத்தப்படும் அடுத்த கட்ட விசாரணையில் யார் யாருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறது என தெரிய வந்துவிடும். எங்களது முதற்கட்ட விசாரணையில் சந்துருஜீ இந்த கொள்ளை கும்பலுக்கு ஒரு புரோக்கர் போல செயல்பட்டு வந்துள்ளார் என்பதையும் தெரிந்து கொண்டும். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருப்பது பீட்டர், தினேஷ், ரஹ்மான் தான்" என பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியுள்ளார் சீனியர் எஸ்.பி ராகுல் அல்வால்.
இந்த வழக்கில் சந்துருஜீ உட்பட இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசாரால் இன்றுவரை குற்றப்பத்திரிக்கை கூட சமர்ப்பிக்க முடியவில்லை. அதற்கு அரசியல் குறுக்கீடும், பாதிக்கப்பட்டவர்கள் யாருமே தாமாக முன்வந்து புகார் கொடுக்காததும் தான் காரணம் என சொல்லப்படுகிறது. அதே வேளையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக முதன்முதலில் கைது செய்யப்பட ஐந்து பேர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியே போலீசார் இந்த வழக்கை இடியாப்ப சிக்கலை இழுத்து கொண்டே போனால் சந்துருஜீ உட்பட குற்றவாளிகள் எல்லாருமே இதே காரணத்தை சொல்லி ஜாமீனில் வெளி வந்துவிடுவார்கள். அதன் பிறகு இந்த வழக்கும் பத்தோடு பதினொன்றாகி விடும்" என குமுறும் புதுச்சேரி பொது மக்கள் போலீசாரின் துரிதமான நடவடிக்கையை இந்த வழக்கில் எதிர்பார்க்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி புதுச்சேரி போலீசார் செயல்படுகின்றனர் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட இன்டர்நெட் சென்டர் உரிமையாளர் ஜெயச்சந்திரன் (30) ஜாமினில் வெளிவந்த நிலையில் நம் கண்ணில் பட்டார். சொகுசு காரில் புதுச்சேரி நகரை ரவுண்ட் அடித்தார். அவரை நாம் பின் தொடர்ந்ததில் புதிய மொபைல் போன் ஒன்றும், அதன் மூலம் தன் கூட்டாளிகளை அவன் தொடர்பு கொள்ள புதிய சிம் கார்டு ஒன்றும் வாங்கியதை தெரிந்து கொண்டோம். கொள்ளை அடித்த பணத்தில் தனக்கு கிடைத்த பங்கில் போலீசாரின் கண்களுக்கு படாமல் பதுக்கி வைத்துள்ள அவன் தற்போது அதனை வைத்து நண்பர்கள் பெயரில் சொத்துகள் வாங்க உள்ளதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அதே போல நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள மற்றொரு குற்றவாளி பாலாஜி (27) தற்போது கிட்னி பாதிப்பில் சிக்கி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலாசிஸ் சிகிச்சை எடுத்து வருவதாகவும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிவரஞ்சனி