அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் (Right To Education Act - 2009) கீழ் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் சென்ற ஆண்டு தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் இணையதளத்தில் விண்ணப்பித்து வந்த நிலையில் , தற்போது புதிய இணையதள முகவரியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான இணையதள முகவரி : http://rte.tnschools.gov.in/tamil-nadu ஆகும். இந்த இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான வழிமுறைகள் தமிழில் குறிப்பிட்டுள்ளனர்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் .
2. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.
3. பெற்றோர் அல்லது குழந்தையின் காப்பாளரின் இருப்பிட சான்றிதழ் (குடும்ப அட்டை , ஆதார் அட்டை).
4. வருமான சான்றிதழ்.
5. சாதி சான்றிதழ்.
தமிழக பள்ளிக்கல்வி துறை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் இணைய தள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் யார்? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் இந்த சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை சுயநிதி பள்ளிகள் தவிர மற்றும் அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் ஏதாவது ஒன்றில் சேர்க்கலாம். இதற்கான விண்ணப்பம் தொடங்கிய நாள் : 22/04/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 18/05/2019. அதே போல் எங்கு போய் விண்ணப்பிப்பது ? தமிழக அரசு இ சேவை மையங்கள் , மாவட்ட கல்வி அலுவலகங்கள் ,தனியார் இண்டர்நெட் சென்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப கட்டணங்களை அரசுக்கு எதுவும் செலுத்த தேவையில்லை. அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சுமார் 25% இட ஒதுக்கீட்டை கட்டாயம் அளிக்க வேண்டும். மேலும் இந்த சட்டத்தின் கீழ் சேரும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி கட்டணத்தை சமந்தப்பட்ட பள்ளிகள் வசூலித்தால் தமிழக பள்ளிக்கல்வி துறையில் பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். அதே போல் (LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை ) கல்வி கட்டணம் முற்றிலும் இலவசமாகும். இதற்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.