நாகை அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 50 பேர் கொண்ட கும்பல் மீனவ கிராமத்தின் உள்ளே புகுந்து வீடுகள், வாகனங்கள் என கண்ணில்பட்டதை ஆயுதங்கள் கொண்டு தாக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். நடவடிக்கை எடுக்கக் கோரி மற்றொருதரப்பு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேலப்பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே சமீப காலமாக மோதல் நிலவி வருகிறது. மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என மேலப்பட்டினச்சேரி கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், மேலப்பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் தமிழக அரசால் கட்டப்பட்ட துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் மீன் ஏலம் விடுவதற்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தை கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது. இதனிடையே மேலப்பட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ், மற்றுமொரு சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது மற்றொரு தரப்பு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மேலப்பட்டினச்சேரி கிராம மீனவர்கள், நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமத்தில் யாரும் இல்லாததை அறிந்த மற்றொரு தரப்பு மீனவர்கள் மேலப்பட்டினச்சேரி பகுதியில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை அடித்து நொறுக்கி, இருசக்கர வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி, கையில் ஆயுதங்களுடன் 50 பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நாகை எஸ்.பி ஜவஹர் தலைமையில் மோதல் நடந்த பகுதியில் அதி விரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. காயமடைந்த மேலப்பட்டினச்சேரி கிராம மீனவர்கள் இரண்டு பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.