இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு காவல்நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மணிவேல், எஸ்.ஐ.ஜெகன் தலைமையிலான போலீசார், ஆற்காடு, காவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த ஆற்காடு நகரம் பாலசுந்தரம் தெருவை சேர்ந்த அமுலு (எ) செல்வம், திமிரி காவனூர் கிராமத்தை சேர்ந்த கௌரி ஓட்டல் உரிமையாளர் கணபதி ஆகிய இருவரை டிசம்பர் 16ந்தேதி கைது செய்தனர்.
போலி மதுபானங்கள் தயாரிப்பதற்கு மூளையாக செயல்பட்டதாக, அதன் சூத்திரதாரி கைது செய்யப்பட்டவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஆற்காடு கும்மடம் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவர் தலைமறைவாக உள்ளார், அவரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட போலி மதுபானங்கள், மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் லேபில்கள், அரசு மதுபான கடையில் விற்பதுப்போல் காட்ட அரசின் லோகோ போட்ட ஹாலோ கிராம் ஸ்டிக்கர் மற்றும் உற்பத்தி செய்த சரக்கை டெலிவரி செய்ய பயன்படுத்திய கார், டூவிலர் போன்றவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.