
மக்கள் பணியில் அரசியல் கட்சிகள் செயல்படுவதாகக் கூறி வருகிறது. அதில் சிலர் உண்மையிலேயே செயல்படுகிறார்கள். அந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்து வருகிறது. அதில் ஒன்று தான் இந்த நிகழ்வு.
பெரிய பெரிய மால், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களுக்கும் மிகப் பெரிய வியாபார நிறுவனங்களுக்கு மட்டுமே கோடிகளை, லட்சங்களை கடன்களாக வாரிக் கொடுக்கும் வங்கிகள், சாலையோரத்தில் துணி விரித்து, கூடைகளில் காய், கனிகள், கீரைகள் விற்கும் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குமா? என்றால் அது நடைபெறாத ஒன்று என எல்லோருக்கும் தெரியும். ஆனால், அப்படிப்பட்ட வறிய நிலையில் உள்ள விளிம்பு நிலை சிறு வியாபாரிகளுக்கும் வங்கிகள் கடன் கொடுக்கலாம் என்பதைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள் ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
ஈரோடு அருகே உள்ள பவானி நகர சாலையோர வியாபாரிகளுக்கு, மத்திய அரசின் மானிய கடன் திட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கமான A I T U C சார்பில் எடுக்கப்பட்ட முன்முயற்சியால், பவானி பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தலா ரூபாய் 10,000/- வீதம், அவர்களின் தொழில் அபிவிருத்திக்காகக் கடன் கொடுக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், நகரச் செயலாளர் வழக்கறிஞர் ப.மா.பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் வங்கி மேலாளர் வசந்த் மற்றும் வங்கி அதிகாரிகள் கடன் வழங்கினர்.
சங்க தலைவர் இ.சண்முகசுந்தரம், செயலாளர் ரவிச்சந்தின் ஆகியோர் உடன் இருந்தனர். இதற்காக முழு முயற்சி எடுத்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறுகையில், "அனைத்து தேசிய வங்கிகளும் இதைபோன்று முன் வந்து இத்தகைய கடனுதவிகளை சிறு வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும்" என்றார். இது போன்ற முயற்சிகளைப் பாராட்டத்தான் வேண்டும்.