கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது குறுவை சாகுபடி முடித்து நெல் அறுவடை செய்து வருவதால் அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் மருங்கூரில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக மருங்கூர் அண்ணா தெருவில் உள்ள உலர் களத்தை தேர்வு செய்துள்ளனர். ஆனால் அக்களத்தில் விவசாயிகள் நலன் காக்க கட்டப்பட்ட உரம் தயாரிக்கும் கூடம், கால்நடைகளுக்கு தாகத்தை தீர்க்கும் தண்ணீர் தொட்டி, இளைஞர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் என பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட திட்டங்களை, அப்புறப்படுத்தி விட்டு ஆளும் கட்சியை சேர்ந்த முன்னாள் சேர்மேன் வசதிக்காக கொள்முதல் நிலையம் அமைக்க முற்பட்டனர்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஏற்கனவே பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடத்தில் கொள்முதல் நிலையம் அமைக்கக் கூடாது என்றும், குடியிருப்புகள் உள்ள இடத்தில் கொள்முதல் நிலையம் அமைத்தால் நெல் உமிகள் பறந்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும் என்றும், வாகன போக்குவரத்துகள் அதிகமாகி இடையூறுகள் ஏற்படும் என்றும் கூறி அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் பொதுமக்கள்.
அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் சேர்மேனுக்கு ஆதரவாக ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செயல்பட்டு அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முழுவதுமாக அகற்றுவதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உறுதுணையாக இருப்பதை கண்டித்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், அங்கு சென்ற கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
தன்னிச்சையாக முடிவு எடுத்து அரசு ஏற்படுத்திய நல்ல திட்டங்களை அகற்ற அனுமதி அளித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.