திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலைக்கு உதிரிப் பாகங்களை ஏற்றிவந்த 2 லாரி டிரைவர்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருச்சி பொன்மலையில் இயங்கி வரும் ரயில்வே தொழிற்சாலைக்கு வெளி மாநிலத்தில் இருந்து உதிரிப் பாகங்களை கடந்த 21ம் தேதி 12 லாரி ஓட்டுநர்கள் ஏற்றி வந்தனர். இதையடுத்து ஊரடங்கு காரணமாக ரயில்வே தொழிற்சாலை வாயிலில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் அங்கிருந்த 12 லாரி டிரைவர்களுக்கு ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.அப்போது, அவர்கள் இருவருக்கும் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் கலெக்டர் மற்றும் மருத்துவக் குழுவிற்குத் தகவல் சொல்லப்பட்டது.
இதையடுத்து சுப்ரமணியரம் மாநகராட்சி மருத்துவ அதிகாரி அமுதா மற்றும் கீழகல்கண்டார் கோட்டை மாநகராட்சி மருத்துவ அதிகாரி இந்துமதி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று வெளிமாநில லாரி டிரைவர்கள் 12 பேருக்கு ஆய்வு செய்தனர்.
இதில் ராஜஸ்தான், உத்திரபிரேதேசத்தைச் சேர்ந்த 2 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.