அண்மையில் பிரதமர் மோடியால் பாரட்டப்பட்டு பாஜகாவில் இணைந்த முடி திருத்தம் தொழில் செய்துவரும் மோகன் கந்துவட்டி வழக்கில் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
மதுரை மேலமடை பகுதியில் முடி திருத்தம் கடை நடத்திவரும் மோகன், வட்டிக்கு கடன் கொடுத்து வாங்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மகள் உயர்கல்விக்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை கரோனா நிவாரண உதவிகளுக்காக வழங்கினார். இச்செயலுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மன் கி பாத் உரையில் பாராட்டு தெரிவித்தார். ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஒன்று மாணவிக்கு ஏழை மக்களின் நல்லெண்ண தூதர் பதவி வழங்கியது.
இந்நிலையில், மதுரை அண்ணாநகா் அன்பு நகரைச் சோ்ந்த கங்கைராஜன் (50), மோகன், தன்னிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக அவர் மீது புகார் கொடுத்துள்ளார். அவர் ரூ.30 ஆயிரத்தை மோகனிடம் கடனாக வாங்கியுள்ளார். அந்த தொகையை கங்கைராஜன் வட்டியுடன் திருப்பி கொடுத்த பின்னரும், மோகன் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக அண்ணா நகா் காவல் நிலையத்தில் கங்கைராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மோகனை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவா் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
மோகன் அண்மையில் தன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், "தமிழகத்தில் பாஜவை பலப்படுத்தவும், பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவும் குடும்பத்துடன் உழைப்போம்" என்றும் தெரிவித்திருந்தார்.