
சிதம்பரம் அருகே ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜமாணிக்கம் ( 50 )-ஆரியமாலா (46) தம்பதி. நேற்று (29.08.2021) இவர்கள் இருவரும் குடிகாடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து இருவரும் மாலை 5 மணிக்கு இருசக்கர வாகனத்தில் ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்திற்குப் புறப்பட்டனர்.
அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற வேன் ஒன்றின் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன்-மனைவி மீது மோதியுள்ளது. இதனால் தலை நசுங்கி ராஜமாணிக்கம் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். செய்தியறிந்து ஆத்திரமடைந்த ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் கடலூர் நெடுஞ்சாலையில் பெரியபட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்து, பிரேதத்தை கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.