Skip to main content

எல்லாவற்றுக்கும் லைகாதான் காரணம்..! ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

Leica is the reason for everything  director shankar


நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் தாமதத்துக்குத் தயாரிப்பு நிறுவனமான லைகாதான் காரணம் என குற்றம்சாட்டி, இயக்குநர் ஷங்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

 

இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர். முதலில் இந்தப் படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்ததாக கூறியுள்ளார்.

 

கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும், 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்ததாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதைக் குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது புகார் தெரிவித்துள்ளார்.

 

தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும் எனவும், அரங்குகள் அமைத்துத் தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் பதில் மனுவில் கூறியுள்ளார். நடிகர் கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும், அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் இயக்குநர் ஷங்கர் தனது பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.

 

இதுதவிர படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் கூறியுள்ளார். படத் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்குத் தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்க தயாராக இருப்பதாக கூறியும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீணடித்தது லைகா நிறுவனம்தான் எனவும், இந்தக் காலத்தில் தான் சும்மா இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் ஷங்கர் கோரியுள்ளார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்