
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
'தென்கைலாயம்' என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதிவரை தொடர்ச்சியாக பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுமார் 6000 அடி உயரம் இருக்கக்கூடிய வெள்ளியங்கிரி மலைக்கு வருபவர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்திருந்தது. இதற்கு முன்பாகவே கோவை வெள்ளிங்கிரி மலையில் மலையேற சென்றவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மூச்சுத்திணறல்; உடல் எடை பிரச்சனை; இதய பிரச்சனை இருப்பவர்கள் மலை ஏற வேண்டாம் என வனத்துறை சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவா என்பவர் தன்னுடைய நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றுள்ளார். ஏழாவது மலைக்குச் சென்று சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு முதல் மலைக்கு வந்து கொண்டிருந்த பொழுது திடீரென மூச்சுத்திணறி கீழே சுருண்டு விழுந்தார். இதில் வனத்துறையால் மீட்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட சிவா உயிரிழந்ததாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உயிரிழந்த சிவா இதய பிரச்சனைக்காக ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் மலை ஏறியதால் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.