தூய்மையான அரசியல், மாற்றுச் சித்தாந்தம் கொண்டவர்களும் நேசிக்கும் ஆளுமை, விட்டுக்கொடுக்காத போராட்டக் குணம் என இன்னும் பல சிறப்புகளோடு நடமாடும் நல்ல உள்ளம் 'தோழர் நல்லகண்ணு'
1925-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணுவின் வாழ்க்கையே போராட்டத்தில் துவங்கியதுதான். இளம் வயதில் நெல் மூட்டை பதுக்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி நின்ற அந்த கால்களும், மனமும் தற்பொழுது வரை அமரவில்லை. 96-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இன்று கூட "போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் போராட்டம் தேவைப்படுகிறது'' எனத் தலையில் கொட்டும்படி எடுத்துரைத்துள்ளார்.
சுதந்திரப் போரில் சுருட்டால் மீசையைச் சுட்டபோதும் போராட்டத்தைக் கைவிடாமல் நின்ற அவரது போராட்டக்குணமும், தியாகமும், "போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் போராட்டம் தேவைப்படுகிறது'' என்று இன்று அவர் கூறிய வார்த்தையிலும் நீடிக்கிறது 96-வயதிலும். ஆம்... வீரியமிக்க அந்த கைகள் எத்தனை போராட்டப் பதாகைகளை ஏந்தியிருக்கும்தன் வாழ்நாளில்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் நல்லகண்ணு தான் முதல்வர் என அனைத்துத் தரப்பினராலும் கூறப்படும் அளவிற்கு 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னைப் பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டவர். நெல் மூட்டை பதுக்கல், பஞ்சாலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம், மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டம், சுதந்திரப் போராட்டம் என இடைவிடாத சமூகப்பணி மூலம் இளைஞர்களை அணிதிரட்டியவர். அதேபோல் விவசாய சங்கப் பதவி, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவி என 13 ஆண்டுகளுக்கும் மேல் பொறுப்பில் இருந்தவர்.
தூய்மையான அரசியல் கரங்களுக்குச் சொந்தக்காரர் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். அவரது 80-ஆவது பிறந்தநாளன்று அவர் செயல்பட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தபொழுது மீண்டும் அதைக் கட்சி வளர்ச்சிக்கே கொடுத்தார். அதேபோல் அம்பேத்கர் விருதுடன் தமிழக அரசு கொடுத்த ஒரு லட்சத்தை சரிபாதியாகப் பிரித்து பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர்களுக்கும் கொடுத்தவர்.
செல்வத்தையும், ஆடம்பரத்தையும் கொஞ்சமும் விரும்பாத 'நாட்டின் செல்வம்' தோழர் நல்லகண்ணு...