கேமரா கோபுரம் திடீரென்று சரிந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் ஒருவர் சிக்கி உயிரிழந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி காப்புக் காட்டுப் பகுதியில் கேமரா கோபுரம் ஒன்று வனத்துறை சார்பாக நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை அந்த பகுதியில் வேகமாக காற்று வீசியது. இதனால் திடீரென அந்த கோபுரம் சரிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த கல்லூரியின் மாணவர் தினேஷ் குமார் (20) மீது கோபுரம் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சிக்கி உயிரிழந்தார்.
தினேஷ் குமார் அந்த பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு பயின்று வந்துள்ளார். கல்லூரி முடிந்து இன்று வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர், அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கேமரா கோபுரம் சாய்ந்து அவர் மீது விழுந்தது. இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே மாணவன் தினேஷ் குமார் உயிரிழந்தார்
உடனடியாக அப்பகுதி ஊர் மக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். கேமரா கோபுரத்தை அகற்றி சிக்கிக் கொண்டிருந்த மாணவனின் உடலை அப்புறப்படுத்தினர். உடனடியாக அங்கு வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த தினேஷ்குமாரின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த காடு அதிக செம்மரங்கள் உள்ள பகுதி என்பதால் வனத்துறை சார்பாக கண்காணிப்பிற்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. தற்பொழுது தொடர் மழை மற்றும் அதிகமாக காற்று வீசி வருவதால் கோபுரம் சாய்ந்து கல்லூரி மாணவன் உயிரிழந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.