Skip to main content

கலெக்டர் – டி.ஆர்.ஓ மோதல் – பாதிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள்

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

 

Collector - DRO Conflict - Affected Revenue officers

 

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக கந்தசாமி உள்ளார். மாவட்ட வருவாய்த்துறை அலுவலராக ரத்தினசாமி உள்ளார். கரோனா பரவலை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கலெக்டர் – டி.ஆர்.ஓ இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல விவகாரங்கள் நடக்காமல் முடங்கியுள்ளன என்கிற குரல்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வருவாய்த்துறை ஊழியர்களிடையே எதிரொலிக்கின்றன.

 

இதுப்பற்றி நம்மிடம் பேசிய வருவாயத்துறையைச் சேர்ந்தவர்கள், “டி.ஆர்.ஓ. நேர்மையானவர். அவரை சந்திக்க பொதுமக்கள் வந்தால் யாரையும் காக்கவைக்கமாட்டார். உடனே பார்த்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்டு அதனை சரிசெய்ய பார்ப்பார். அதேநேரத்தில் சில விவகாரங்களில் முடிவு எடுப்பதில் ரொம்பவே தயங்கினார். இது கலெக்டரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

அதேநேரத்தில் கடந்த மார்ச் மாதம் கரோனா பரவல் தொடங்கியது முதல் டி.ஆர்.ஓ. பயந்துவிட்டார். தன் அலுவலக ஊழியர்கள் உட்பட யாரையும் சந்திப்பதை தவிர்த்தார். கரோனா தொடர்பான பணிகளில், அலுவலக கூட்டங்களில் கூட அவர் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினார். இதனால் டி.ஆர்.ஓ செய்ய வேண்டிய பணிகளை பயிற்சி உதவி ஆட்சியர் மந்தாகினி தான் செய்துவந்தார்.

 

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வர் வருகையின்போது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், முதல்வர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுயெல்லாம் கலெக்டரை கோப்படுத்திவிட்டது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் கடந்த சில தினங்களாக டி.ஆர்.ஓ. அலுவலகத்துக்கே வரவில்லை.

 

இரண்டு தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை ஆய்வாளர், உதவியாளர்கள் பதவி உயர்வுக்கான பைல் அவரது கையெழுத்துக்கு அவசரம் எனச்சொல்லி அவரது கேம்ப் ஆபிஸ்க்கு அனுப்பிவைத்துள்ளனர். அந்த பைலில் அவர் கையெழுத்திடாததால் பதவி உயர்வில் செல்ல வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என்றார்கள்.

 

வேறு சில அதிகாரிகளோ, கரோனாவை கண்டு பயப்படக்காரணம், அவரது குழந்தையை நினைத்து தான். அதனால்தான் அவர் தயங்குகிறார். கலெக்டர் – டி.ஆர்.ஓ மோதல் என்பது கரோனாவால் வந்ததுல்ல. அதற்கு முன்பிருந்தே அலுவல் ரீதியாக சில சில நெருடல்கள் இருவருக்கும் இருந்தாலும், சமீபத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்தான் பெரிய மோதலை உருவாக்கிவிட்டது.

 

இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு பெண் அதிகாரிக்காக, ஆளும்கட்சியை சேர்ந்த அந்த முக்கிய அதிகாரி கலெக்டரிடம் கடினமாக பேசியுள்ளார். அவர் டி.ஆர்.ஓவை காட்ட அவரிடமும் எகிறியுள்ளார். இதில்தான் இருவருக்கும் முட்டிக்கொண்டது என்கிறார்கள். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்