![Coimbatore school student case.. .teacher Mithun Chakaravarthy arrested by police](http://image.nakkheeran.in/cdn/farfuture/FaabVCyg5tVjIjiVHQQi8jsWxUbItbEaZMhvvJzgcGA/1636780446/sites/default/files/inline-images/th-1_2187.jpg)
கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி, வியாழக்கிழமை மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி முதலில் படித்த சின்மயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உக்கடம் அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணை வளையத்தில் இருந்த ஆசிரியர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி உடுமலைப் பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.