மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள கப்பலூர் தொழிற்பேட்டையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. மகளிர் தொழிற்பேட்டை எனும் பகுதியில் ஆணையூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பெயிண்ட் மற்றும் காலணி ஒட்டுவதற்கான தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திடீரென அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின. சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அனைத்து வருகின்றனர். மொத்தமாக ரசாயனப் பொருள் தயாரிக்கப்படுவதற்காக 24 பேரல்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒன்றன்பின் ஒன்றாகப் பேரல்கள் வெடித்துச் சிதறி எரிந்தன.
இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு புகை சூழ்ந்துள்ளது. தீயானது அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவும் என்பதால் கூடுதலாக மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்தும் வாகனங்களை வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.