
சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா நேற்று (17.02.2025) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்களின் கல்விக்கு எப்படியெல்லாம் துணை நிற்க முடியும் என்று அதற்கான திட்டங்களை 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாக செயல்படுத்தி இருக்கிறார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமாக இருந்தாலும் சரி. அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேருகின்ற பெண் குழந்தைகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் கல்வி உதவித்தொகையாக இருந்தாலும் சரி. அதேபோல் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகின்ற தமிழ்ப்புதல்வன் திட்டமாக இருந்தாலும் சரி. பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவச் செல்வங்கங்களுக்காக செயல்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நான் முதல்வன் திட்டம், உயர்வுக்குப் படி, இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம், எண்ணும் எழுத்தும், கலை இலக்கியப் போட்டிகள் என இந்தியாவிலேயே கல்விக்கு என்று மாணவர்களுக்கு திட்டங்களை தருகின்ற ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்.
அதனால் தான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், எந்த பகுதிக்கு சென்றாலும், அங்குள்ள மாணவ, மாணவிகள் மிகுந்த அன்போடு நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, ‘அப்பா... அப்பா...’ என்று உரிமையோடு அழைக்கின்றார்கள். அதுபற்றிக் கூட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் கூறியிருக்கின்றார். ‘தமிழ்நாட்டு மாணவர்கள் என்னை அப்பா, அப்பா என்று சொல்ல. சொல்ல எனக்கு இன்னும் பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இன்னும் அவர்களுக்கு நான் நிறைய திட்டங்களை வேண்டும் என்ற உத்வேகம் உருவாகியுள்ளது’ என்று சொல்லியிருக்கின்றார். ஆகவே, தந்தையாக இருந்து மானவர்களுக்கான திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்துவார். ஒவ்வொரு மாணவர்களின் வீட்டில் ஒரு அண்ணனாக நானும் உங்களுக்கு என்றும் துணை நிற்பேன் என்று கூறிக்கொள்கிறேன்” எனப் பேசினார்.