தமிழக பட்ஜெட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்து வருகிறார்.
அதிமுகவினரின் அமளிக்கிடையே வாசிக்கப்பட்ட பட்ஜெட்டில் இலங்கை தமிழர் நலன் குறித்து வாசிக்கப்பட்ட போது, “இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளித்து உதவி செய்வதற்கான ஒப்புதலை முதலமைச்சர் மத்திய அரசிடம் பெற்று 3 கப்பல்களில் 40000 டன் அரிசி, 500 டன் பால்பவுடர், 102 டன் மருந்துப் பொருட்கள் ஆகியன 192 கோடி செலவில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அவர்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடங்கள் அமைக்கும் நோக்கத்துடன், மறுவாழ்வு முகாம்களில் 7469 புதிய வீடுகள் கட்டப்படும் என அரசு அறிவித்தது. இதன் முதற்கட்டமாக 3510 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3959 வீடுகளைக் கட்ட, வரும் நிதியாண்டில் 229 கோடி ரூபாயை அரசு வழங்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.