Skip to main content

“நான் சாதாரண தொண்டன்” - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

Published on 18/02/2025 | Edited on 18/02/2025

 

ADMK former Minister Sengottaiyan says I am an ordinary worker

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு - அவினாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தைக் கொண்டுவர 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ. 3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளைத் தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தான் 2026ஆம் சட்டமன்றத் தேர்தலையொட்டி, கட்சி பணிகளை மேற்கொள்ள அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. அ.தி.மு.கவில் அமைப்பு ரீதியாக 82 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்த எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பில், செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழக அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு  அவர் பதிலளித்துப்  பேசுகையில், “இது தொடர்பாகக் கேள்வி கேட்க வேண்டியது பொதுச் செயலாளரிடம் (எடப்பாடி பழனிசாமி).  என்னிடம் கேட்டால்.... நான் ஒரு சாதாரண தொண்டன்” எனப் பதிலளித்தார். 

சார்ந்த செய்திகள்