ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்த குழந்தையின் வலது கை அழுகியதால், அந்தக் கை அகற்றப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தின் காரணமாகத் தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே பெற்றோரின் குற்றச்சாட்டின் காரணமாகக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதில் குழந்தைக்குத் தவறான சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வைத்து குழந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், குழந்தையின் உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால் இன்று காலை உயிரிழந்தது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தையின் தாய், “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடைய அலட்சியத்தின் காரணமாகத்தான் எனது குழந்தையின் கை அழுகி பின் அகற்றப்பட்டது. அன்றையிலிருந்து என்னுடைய குழந்தை இங்குதான் சிகிச்சை பெற்று வந்தது. ஆனால் கை அகற்றப்பட்டதற்கு நீதி வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தேன். ஆனால் அதற்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவர்கள் எல்லாம் எங்களிடம், ‘குழந்தைக்குத் தலையில் ஒரு நீர் குழாய் வைக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்தால் குழந்தையின் உயிருக்கு 100 சதவீதம் ஆபத்து இருக்கிறது’ என்று கூறினார்கள். நானும் அதனை ஏற்றுக்கொண்டேன். அடுத்த நாள் மருத்துவரிடம் ஏன் சார் குழந்தை எடை அதிகமாக மாட்டேங்குது என்று கேட்டேன். அதற்கு அவர் குழந்தைக்கு இயற்கையாக இருக்கிற எதிர்ப்பு சக்தி இல்லை. நாங்கள் கொடுக்கும் மருந்துகள் மூலம் செயற்கையான எதிர்ப்பு சக்திதான் குழந்தைக்குக் கிடைக்கிறது என்றார்.
அதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, குழந்தையின் உடலில் நிறைய நரம்புகள் கட் ஆகிவிட்டது என்றார்கள். குழந்தையின் கை எடுக்கப்பட்டதால் நரம்புகள் கட்டாகிவிட்டது. கை எடுப்பதற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சைதான் காரணம். ஆனால் இன்று வரைக்கும் அதற்கான நீதி கிடைக்கவில்லை” எனக் கண்ணீர் மல்கப் பேட்டியளித்தார்.