சிதம்பரம் நடராஜர் கோயிலில் 6 வயது முதல் 60 வயது உள்ளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஒரே நேரத்தில் 2800 பேர் கலந்துகொண்டு பரதநாட்டியம் ஆடினார்கள். இதில் 90 பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆட வந்தவர்களிடம் ரூ 2000 வரை வசூல் செய்துகொண்டு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லையென்று சென்னை மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்த வந்த நாட்டிய பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் புகார் கூறினார்கள். இது சமூக வலைதளம் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வைரலாகியது. இதற்கு சமூக வலைதளத்தில் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் கோயில் தீட்சிதருமான அய்யப்பனிடம் கேட்டபோது, கோயிலில் நாட்டியம் ஆடும் நிகழ்ச்சி 40 நிமிடம் தான். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். நாட்டியம் ஆட கோயிலுக்கு வரும் முன்னே அரை லிட்டர் வாட்டர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட், பாதம்பால் உள்ளிட்டவைகளை ஒரு பேக் கொடுத்துள்ளோம். அதனை அவர்கள் தங்கி இருக்கும் மண்டபத்திலே வைத்துவிட்டு கோவிலுக்கு உள்ளே வந்துவிட்டார்கள்.
பின்னர் கேயிலுக்கு வந்து தண்ணீர் கேட்டால் என்ன செய்வது. இது யாருடைய தவறு? கோயிலின் உள்ளே கழிவறை வசதிகள் செய்து கொடுக்கமுடியாது. அப்படியே அவசரம் என்றால் கோயிலுக்கு வெளியே உள்ளது. அதைத்தான் பயன்படுத்த வேண்டும். அவர்கள் கொடுத்த பணத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதனை செய்துவிட்டோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், வரும் 12-ந்தேதி திரைப்பட பாடகர் ஜேசுதாஸ் கோவிலுக்கு வருகை தந்து இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடுகிறார். அதனை தொடர்ந்து 13-ந்தேதி நடைபெறும் ருத்ராபிஷேகத்தில் கலந்துகொள்கிறார். ஜேசுதாஸ் சிதம்பரம் கோயிலுக்கு வருவது குறித்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு என்பது தவறானது. சிதம்பரம் கோயில் பேதமற்றது. இங்கு யார் வேண்டுமானாலும் வந்து சாமியை தரிசிக்கலாம். இதுகுறித்து எதிர் கருத்து கூறுபவர்கள் மூடர்களே என்று கூறினார்.