சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் இன்றுடன் 112 நாட்கள் ஆகிறது. முகிலன் காணாமல் போனது பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றத்தில் வாய்தா வாங்கியது சிபிசிஐடி போலீசார்.
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்தில் முகிலன் தரப்பில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆஜரானார். அப்போது சிபிசிஐடி போலீசார் ஒரு சீலிட்ட கவரை நீதிபதியிடம் கொடுத்து முகிலன் சம்பந்தமாக முக்கியமான தகவல்கள் இதில் உள்ளது என கூறினார்கள். அந்த விபரங்களை பார்த்த நீதிமன்றம் முகிலன் வழக்கை நான்கு வாரத்திற்கு தள்ளி வைப்பதாக கூறினார்கள். அப்போது முகிலன் தரப்பு வழக்கறிஞர் இரண்டு வாரத்திற்கு மட்டும் தள்ளி வைத்து முகிலனை ஆஜர்படுத்த வேண்டும் என கூறினார்கள்.
சிபிசிஐடி தரப்பு மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்டதால் நீதிமன்றம் மூன்று வாரங்கள் தள்ளி வைத்து இதுதான் ஃபைனல் என கூறியது. அனேகமாக அடுத்த விசாரணையின்போது முகிலன் சம்பந்தமான பிரச்சினைக்கு முழுமையான தீர்வை சிபிசிஐடி ஏற்படுத்தி கொடுக்கும் என தெரிகிறது.