புதுக்கோட்டைக்கு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்று கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் ஆட்சி மாறிவிட்டது. அதன் பிறகு வந்த அ.தி.மு.க ஆட்சியில் முதல்வர் ஜெ மீண்டும் அறிவித்து நிதி ஒதுக்கி கட்டுமானப்பணிகள் நிறைவடையும் நிலையில் திறப்பு விழா செய்யும் முன்பே இறந்தார்.
இந்த நிலையில் தான் எடப்பாடி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு கடந்த ஆண்டு (2017) ஜூன் 9 ந் தேதி புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு அவர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவுக்கு புறப்பட்ட போது போலிசார் அங்கே செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மருத்துவக்கல்லூரி திறக்கும் முன்பே அங்குள்ள கேண்டீனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கருணா டெண்டர் இல்லாமலே எடுத்துக் கொண்டார்.
கேண்டீனை அமைச்சரின் உதவியாளர் நடத்தினாலும் அங்கு விற்கப்படும் உணவு, டீ உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகம் என்று கல்லூரிக்கு வெளியே சாலை ஓரமாக சிலர் கடை போட்டுவிட்டனர். அதனால் நோயாளிகளும், நோயாளிகளின் உறவினர்களும் வெளியே வந்து உணவு வாங்க தொடங்கினார்கள். அதனால் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் கேண்டீன் வியாபாரத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் வெளியே சென்று உணவு வாங்க செல்ல முடியாமல் கதவுகளை பூட்டிவிட்டார்கள். ஆனாலும் சுற்றுச்சுவர் எறி குதித்து சென்று உணவு வாங்கி வந்தார்கள். இதைப் பார்த்த மருத்துவனை நிர்வாகமும், கேண்டீன் நிர்வாகமும் தங்களுக்கு வேண்டிய போலிசாரை வைத்து சாலை ஓரமாக வைக்கப்பட்டிருந்த தரைக்கடைகளை அகற்றினார்கள். அதற்கு ஆக்கிரமிப்பால் விபத்து நடக்கிறது என்று காரணமும் சொன்னார்கள். இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் தோழர்கள் போராட்டம் நடத்தியும் பலனில்லை.
ஆனால் அமைச்சரின் உதவியாளர் கருணா நடத்தும் கேண்டீனுக்கு 9 மாதமாகவே மின் இணைப்பு இல்லை. மின் இணைப்புக்காக அருகில் உள்ள மின்கம்பத்தில் ஒயர்கள் இழுத்து கட்டப்பட்டுள்ளதோடு சரி. ஆனால் அங்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அப்பறம் எப்படி கேண்டீன்ல கிடைண்டர், மிக்சி, ஓடுது, எந்த நேரமும் மின் விளக்குகள் எரியுது, பேன் ஒடுது என்ற கேள்வி எல்லாருக்கும் போல நமக்கும் எழுந்தது.
அப்படியே வெளியே வந்தால் கேன்டீன் பின்பக்கம் ஜன்னல் வழியாக சிவப்பு ஒயர்கள் 2 பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள காலி இடங்கள் வழியாக மருத்துவக்கல்லூரி மோட்டார் அறை வரை நீண்டு மோட்டார் அறைக்குள் செல்கிறது. அதாவது மோட்டார் அறையில் இருந்து திருட்டு மின்சாரம் எடுத்து தான் மருத்துவக்கல்லூரி திறந்த 9 மாதங்களாக அமைச்சரின் உதவியாளர் கேண்டீன் நடத்தி வருகிறார்.
அமைச்சரின் உதவியாளர் என்பதற்காக மருத்துவக்கல்லூரி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் அதற்கும் சேர்த்து அரசு பணத்தை மின்கட்டணமாக செலுத்தி வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் மினசாரம் திருடினால் சரியா?
இதற்கு அபராதம் ஏதும் உண்டா என்று ஒரு மின்வாரிய அதிகாரியிடம் கேட்ட போது..மருத்துவமனைக்கு ஐஐபி டாரிப்ல கட்டணம் வசூல் செய்யப்படும். ஆனால் கேண்டீன்க்கு வீ டேரிப்ல கட்டணம் வரும். இதை முறையாக மின்வாரிய அதிகாரிகள் கணக்கிட்டால் இதுவரை மருத்துவக்கல்லூரி யில் எத்தனை யூனிட் மின்சாரம் எடுக்கப்பட்டிருக்கோ அதுக்கு டேரிப் வீ கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 8 வீதம் கணக்கிட்டு மொத்த தொகையோட 2 மடங்கு அபராதம் விதிக்கனும் என்றார்.
திருட்டு மின்சாரத்தில் கேண்டீன் நடத்திய அமைச்சரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. மின்வாரியம். திருட்டு மின்சாரம் வழங்கிய மருத்துவக்கல்லூரி நிர்வாம் மீது எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
ஆளும் கட்சிகாரர்கள் மின்சாரம் திருவதும் எடப்பாடி அரசின் ஓராண்டு சாதனைகளில் ஒன்றாக உள்ளது.