Skip to main content

வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை; கொள்ளிடத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Published on 28/07/2024 | Edited on 28/07/2024
Cauvery floods; Cuddalore District Collector inspects Kollid

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்  என்று  9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்திகுமார் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு  வினாடிக்கு 1 லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது மேட்டூரில் 109 அடி தண்ணீர் உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,  நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று மதியம் சிதம்பரம் வட்டம் பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு சென்று கொள்ளிட ஆற்றில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் வெள்ள உபரி நீரினால் ஏற்படும்  வெள்ள பாதிப்பு மற்றும் வெள்ள தடுப்பு தொடர்பான ஆய்வு மேற்கொண்டார்.

பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய பகுதியில் உள்ள வெள்ள பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அக்கறை ஜெயங்கொண்டப்பட்டடினத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக கருங்கற்கலால் போடப்பட்ட வெள்ள தடுப்புச் சுவரை பார்வையிட்டார். சிதம்பரம் சார்-ஆட்சியர் ராஷ்மிராணி, அணைக்கரை நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சி நாதன், வல்லம் படுகை பிரிவு உதவிப் பொறியாளர் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

சார்ந்த செய்திகள்