
கேரளாவிலிருந்து சென்னை சென்ற ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பெண் ஒருவர் பயணித்த பொழுது வடமாநில இளைஞர்கள் முன்பதிவு பெட்டியில் அதிகமாகக் குவிந்ததால் பாதுகாப்பின்றி பயணித்ததாகப் பெண் கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் சென்ற விரைவு ரயிலில் சேலத்திலிருந்து பெண் ஒருவர் சென்னைக்கு பயணித்துள்ளார். ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்த அந்தப் பெண் முன்பதிவு பெட்டியில் ஏறி உள்ளார். ஆனால் அந்தப் பெட்டியில் வடமாநிலத்தவர்கள் பல பேர் குவிந்துள்ளனர். உள்ளே செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் இருந்தது. இருப்பினும் உள்ளே சென்ற அந்தப் பெண் அவர்கள் மத்தியில் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெட்டியில் அந்தப் பெண்ணும் வேறொரு பெண்ணும் என இரண்டு பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மூச்சுமுட்டும் அளவிற்கு வடமாநிலத்தவர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நகரக்கூட இடம் இல்லாததால் ரயிலில் இருந்து இறங்க நினைத்தும் முடியாமல் தவித்துள்ளார். கூட்டத்தில் பாதுகாப்பு இல்லை என அலறிய அந்தப் பெண் ரயில்வே போலீசாரின் உதவியும் நாடியுள்ளார்.

ஆனால் உதவி கிடைக்காததால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி கிச்சன் பெட்டியில் பயணித்து சென்னை வந்து சேர்ந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 'ஒருத்தன் என்னையே பார்த்துக்கிட்ருக்கான் எனக்கு ஒரு மாதிரி ஆகிருச்சு' என அந்த பெண் நடந்ததை விவரித்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஒரு பெண் புகார் கொடுத்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என ரயில்வே எஸ்.பி. சுகுணா சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'சம்பவத்தன்று அந்த பெண், ரயில்வே பாதுகாப்புப் படையின் 139 என்ற எண்ணுக்கு அழைத்திருந்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் நேரில் சென்றுள்ளார். ஆனால் முன் பதிவு செய்த பெட்டியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் இருந்துள்ளனர். அவர்கள் கோவை, திருப்பூர் ஆகிய இடங்களிலேயே முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிவிட்டனர். அந்த ஒரு ரயில்வே பாதுகாப்பு படை வீரரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர்களை இறக்கி மாற்று ரயிலில் அனுப்பி வைக்க அந்த வழித்தடத்தில் வேறு ரயில்கள் இல்லாததால் அவர்களை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது'' என்றார்.
மேலும், ''முறையாக முன்பதிவு செய்தவர்கள் இனி எந்தவித அசவுகரியமும் இல்லாமல் ரயிலில் பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் ஏறும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். ஒரு சில சம்பவங்கள் இதுபோன்று நடக்கிறது. ரயில்வே போர்டு மூலம் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனி இதுபோன்று நடக்காமல் இருக்க சில திட்டங்கள் வகுத்துள்ளோம்'' என்றார்.