![Chicken theft case; 1000 police gathered in the city!](http://image.nakkheeran.in/cdn/farfuture/RYTv9P5vnlz69JOA6XXjuS13NbUgSEUfxJxUexKUUk0/1702013674/sites/default/files/inline-images/th-1_4406.jpg)
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் கோழி திருடியதாக கடந்த மாதம் 21 ஆம் தேதி 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி சிறுவலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பேரையும் அவதூறாக பேசி தாக்கியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை கண்டித்தும் வழக்கை நீக்க கோரியும் நேற்று (7ம் தேதி) கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபம் முதல் பஸ் நிலையம் வரை அனைத்து சமுதாய பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோபி உட்கோட்ட எல்லை பகுதியில் நேற்று ஊர்வலம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். அதேபோல் தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கோபி பேருந்து நிலையம், பெரியார் சிலை, டவுன் பகுதி, மார்க்கெட் பகுதி, வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பினர். அதேபோல், வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு கோபிசெட்டிபாளையம் பகுதிக்குள் அனுமதித்தனர். இதனால் நேற்று கோபிசெட்டிபாளையம் பகுதி பரபரப்பாக காட்சியளித்தது.