
தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.
பாஜக, காங்கிரஸ் என எந்த ஆட்சிக்காலத்திலும் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் தமிழக அரசு சார்பில் மேகதாது அணைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 'மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி முறியடிக்கப்படும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை விவகாரத்தில் தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும். கர்நாடக அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக உத்தேசித்துள்ள திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது' என பல சமயங்களில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 'மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் முடிவடைத்துள்ளதாகவும், உரிய அனுமதி கிடைத்தவுடன் கர்நாடகாவில் மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்படும் என இன்று (07/03/2025) கர்நாடக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.