தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக பல நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும் டாஸ்மாக் மது விற்பனை குறையவில்லை. ஒரு ஊரில் ஒரு டாஸ்மாக் கடை மூடப்பட்டதும் அதே ஊரில் பெட்டிக்கடை, ஓட்டல்கள், மரத்தடி, மோட்டார் சைக்கிள் என்று குறைந்தது 10 இடங்களில் மது விற்பனை அமோகமாக நடக்கிறது.
இப்படி கண்ட இடத்திலும் மது விற்பதால் பெண்கள் குழந்தைகள் வெளியே நடமாட முடியவில்லை என சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பொதுமக்கள் புகார் சொன்னால் அவர்கள் விற்கிறது டாஸ்மாக் சரக்கு தானே அதை ஒன்றும் செய்ய முடியாது ஆனால் தமிழக அரசுக்கு வருமானத்தை கெடுக்கின்ற மாதிரி பாண்டிச்சேரி மதுவோ இல்லை போலி மதுவோ விற்றால் சொல்லுங்கள் என்று தகவல் சொல்பவர்களுக்கு பதில் கொடுத்துவிட்டு எந்த ஊரில் இருந்து தகவல் சொன்னார்களோ அந்த ஊர் புதிய சாராய வியாபாரிகளிடம் போட்டுக் கொடுக்கும் பணியும் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மொத்தமாக சரக்கு வாங்கி செல்வோரிடம் போலிஸ்கார் ஒருவர் தனது மருமகனுடன் சேர்ந்து அடித்து வழிப்பறி செய்திருக்கிறார். இதனை பார்த்த கிராமத்து இளைஞர்கள் அவர்களை நையபுடைத்தனர். அப்போது போலீஸ்கார் தப்பியோடிவிட்டார். மருமகனை மட்டும் புளிச்சங்காடு கைகாட்டி ரவுண்டானா அருகே கடைவீதியில் மரத்தில் கட்டி வைத்தார்கள். பிறகு வடகாடு போலிசார் மீட்டு அனுப்பினார்கள். இந்த தகவல் பத்திரிக்கைகளில் வெளியானதால் வழிப்பறி போலிசை சஸ்பெண்ட் செய்தார்கள். இது நடந்து மாதங்கள் ஓடினாலும் இன்னும் அப்படி சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது.
இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் ஒரு வீட்டில் பாண்டிச்சேரி சரக்கு பதுக்கப்பட்டுள்ளது என்று வந்த தகவலையடுத்து மதுவிலக்கு போலிசார் நடத்திய சோதனையில் 35 பெட்டிகளில் பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களும், ஒரு குட்டியானையும் சிக்கியது. இவற்றுடன் செந்தில்குமார்(28) என்ற இளைஞரும் சிக்கினார். ஆனால் இதில் சம்மந்தப்பட்ட சுதாகர், அருண் இருவரும் தப்பிவிட்டனர்.
கடந்த 4 ந் தேதி காரைக்காலில் இருந்து இந்த மதுப்பாட்டில் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டது என்றும், இதை கள்ளத்தனமாக விற்பனை செய்யும் முன்னால் பார் ஓனர்களுக்கும் தற்போதைய புதிய வியாபாரிகளுக்கும் மொத்தமாக விற்பனை செய்யப்படும். அவர்கள் தண்ணீர் கலந்து டாஸ்மாக் குவாட்டர் பாட்டில்களில் மாற்றி விற்பார்கள் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர்கள் யாருக்கெல்லாம் பாண்டிச்சேரி சரக்கு விற்றார்களோ அவர்களையும் பிடித்தால் நல்லது என்கிறார்கள் பொதுமக்கள்.
சாராயத்தை ஒழிக்க கோரி தூக்கில் தொங்கினான் மாணவன்.. அதன் பிறகு ஒரு கடை கூட மூடப்படவில்லை ஆனால் கூடுதல் விற்பனை மையங்கள் தான் உருவாகி உள்ளது.