
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரராக உள்ள 'ஈசன் ப்ரொடக்ஷன்' என்ற நிறுவனம் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட தயாரிப்பு பணிக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
கடன் தொகை 9.39 கோடி ரூபாய் கொடுக்கப்பட வேண்டிய நிலையில் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
பழம்பெரும் நடிகரான சிவாஜி கணேசனின் வீடு ஜப்திக்கு வருவதை அறிந்து பலரும் அது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், அதங்கோடு பகுதியில் மாய கிருஷ்ணன் கோவில் நூறாவது ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனாகவே நடித்தார்.
அதேபோல் தேசிய பாதுகாப்புக்கெல்லாம் உதவி செய்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை வைத்தார். கப்பலோட்டிய தமிழன் இப்படித்தான் இருப்பார் என நடித்தார். பாரதியாராக நடித்தார். திருப்பூர் குமரனாக நடித்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் உருகி நடித்து தேசபக்தியை உருவாக்கினார். அவரது வீடு ஜப்தி ஆகிறது என கேள்விப்பட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. என்கிட்ட பணம் இல்லை இருந்தால் மீட்டு கொடுத்துவிடுவேன். தமிழக முதல்வர், சிவாஜி கணேசனின் வீட்டை மீட்டுக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் என்.எஸ்.கே வீடு ஜப்திக்கு வந்தபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் மீட்டுக்கொடுத்தார். அதேபோல் சிவாஜி வீட்டை தமிழக முதல்வர் மீட்டுக் கொடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.