இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் கடந்த இரண்டு தினங்களாக மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினார்கள். முதல் நாளான நேற்று சீன அதிபர் மாமல்லபுர சிற்பங்களை பிரதமர் மோடியுடன் இணைந்து ரசித்தார். இதனிடையே இரு தலைவர்களும் சந்தித்து கொண்டபோது அதிகாரிகள் சிலரும் உடனிருந்தனர். அப்போது கோட் சூட் அணிந்து கொண்டு பிரதமர் மோடியின் உடனே சென்ற அதிகாரி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலராக பணியாற்றி வரும் மதுசூதன் ரவீந்திரன், தமிழகத்தை சேர்ந்தவரான இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு முடிந்துள்ளார். மதுசூதன் கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.
சீனாவிலுள்ள இந்திய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலராக பணியாற்றி வந்த மதுசூதன், பின்னர் சான் பிரான்சிஸ்கோவிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு மீண்டும் சீனாவிற்கு மாற்றப்பட்ட அவர், சீனாவில் நீண்ட காலம் பணியாற்றியதால், அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் மொழியினை நன்கு கற்று கொண்டார். இதனிடையே கடந்த ஆண்டு சீனாவில் அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங்யை, பிரதமர் மோடி சந்தித்தபோது மொழிப் பெயர்ப்பாளராக மதுசூதன் செயல்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மோடி ஜின்பிங் இரண்டாவது நாள் சந்திப்பில் அவருக்கு பதிலாக பெண் ஒருவர் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.