வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் முத்துப்பாண்டி மற்றும் எஸ்.ஐ ஸ்ரீரங்கநாதன் தலைமையில் காட்பாடி ரயில் நிலையத்தில் மே 29ந்தேதி நள்ளிரவு நேரத்தில் சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது ஐந்தாவது பிளாட்பாரத்தில் பயணிகள் அமரும் நாற்காலியின் கீழே இரண்டு பைகள் இருந்தன. அங்கே ஆட்கள் யாரும் இல்லை. இதனால் அந்த பைகளை எடுத்து சோதனை செய்தனர்.
அந்த பைகளில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதனைப்பார்த்து அதிர்ச்சியானவர்கள் அதனை அலுவலகத்துக்கு கொண்டு வந்து எடை போட்டதில் 25 கிலோ கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு 12, 50,000 ரூபாய் என மதிப்பிட்டுள்ளனர். அதை யார் கொண்டு வந்து இங்கு வைத்தனர்?, எங்கிருந்து அந்த கஞ்சா வந்தது?, எங்கு செல்ல இருந்தது என விசாரணையை தொடங்கியுள்ளவர்கள், ரயில் நிலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து ரயில் மூலமாக தமிழகத்துக்குள் கஞ்சா வருகிறது என்கிறார்கள் போதை ஒழிப்புத்துறை பிரிவு போலிஸார். பேருந்து, கார்களை விட இப்போது அவர்களுக்கு ரயில் வசதியாக இருக்கிறது. இந்த வழியை தடுத்தால் பெரும் பகுதி கஞ்சா வருகையை தடுக்க முடியும் என்கிறார்கள்.